Wednesday, 21 September 2016

நெல்லையில் நாளை முதல் தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ போட்டி

 

 
தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 24-ந்தேதி தொடங்கியது. சென்னை, நத்தம், நெல்லை ஆகிய 3 இடங்களில் இந்தப் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டது. சென்னை, நத்தத்தில் இந்தப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

நெல்லையில் நாளை (செப்டம்பர் 1-ந்தேதி) முதல் தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ போட்டி தொடங்குகிறது. நெல்லை சங்கர்நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன மைதானத்தில் ஒரு அரைஇறுதி மற்றும் 8 ‘லீக்’ ஆட்டம் ஆக மொத்தம் 9 போட்டிகள் நடக்கிறது.

நெல்லையில் நாளை நடைபெறும் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- திருவள்ளூர் வீரன்ஸ் (மாலை 6.30 மணி) அணிகள் மோதுகின்றன.

அதைத்தொடர்ந்து 2-ந்தேதி கோவை-மதுரை அணிகளும் (மாலை 6.30 மணி), 3-ந்தேதி காரைக்குடி- தூத்துக்குடி அணிகளும் (பிற்பகல் 2.30 மணி), 4-ந்தேதி திண்டுக்கல்- தூத்துக்குடி அணிகளும் (மாலை 6.30 மணி), 5-ந்தேதி காஞ்சி-திருவள்ளூர் அணிகளும் (பிற்பகல் 2.30 மணி) மோதுகின்றன.

5-ந்தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- கோவை அணிகளும், 13-ந்தேதி கோவை- திண்டுக்கல் அணிகளும் (பிற்பகல் 2.30 மணி), 14-ந்தேதி காஞ்சி- காரைக்குடி அணிகளும் (மாலை 6.30 மணி) மோதுகின்றன. முதல் அரைஇறுதி ஆட்டம் 16-ந்தேதி (மாலை 6.30 மணி) நடக்கிறது. நாளைய போட்டிக்கு முன்பு மாலை 5.30 மணிக்கு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

இந்த போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு (டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு மட்டும்) இலவச பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து 4 முறை ரசிகர்கள் அழைத்து வரப்படுவார்கள். மதியம் 2.30 மணிக்கு நடைபெறும் போட்டிக்கு பகல் 12 மணி, 12.30 மணி, 1 மணி, 1.30 மணிக்கும், மாலை 6.30 மணிக்கு நடக்கும் போட்டிக்கு மாலை 4 மணி, 4.30 மணி, 5 மணி, 5.30 மணிக்கும் மினி பஸ்சில் ரசிகர்கள் அழைத்து வரப்படுவார்கள். போட்டி முடிந்த பிறகு 21 மினி பஸ்களிலும், 8 பஸ்களிலும் ரசிகர்கள் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள்.

மேலும் படிக்க
http://www.maalaimalar.com/News/Sports/2016/08/31120645/1035868/Tomorrow-first-TNPL-match-in-tirunelveli.vpf

Wednesday, 14 September 2016

கவர்னர் ரோசையா பதவியில் நீடிப்பாரா?: மத்திய அரசு இன்று முடிவு

 
 
தமிழக கவர்னராக கே.ரோசையா கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ந்தேதி நியமிக்கப்பட்டார்.

கவர்னர்களின் பதவி காலம் 5 ஆண்டுகள் ஆகும். இன்றுடன் ரோசையாவின் பதவி காலம் முடிவடைகிறது. இதனால் தமிழகத்தின் புதிய கவர்னர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கர்நாடகா பா.ஜனதா மூத்த தலைவரும், மேல்-சபை தலைவருமான சங்கரமூர்த்தியை தமிழக கவர்னராக நியமிக்க மத்திய அரசு பரிசீலித்து வந்தது. ஆனால் தமிழகம் - கர்நாடகம் இடையே காவிரி பிரச்சினை இருப்பதால் சங்கரமூர்த்தியை நியமிப்பது ஏற்புடையதாக இருக்காது என்று கருதி அந்த முடிவு கைவிடப்பட்டது.

கவர்னர்களின் பதவி காலம் முடிவடைவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு புதிய கவர்னர் நியமனம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். இதற்கு முன் ரோசையாவை தமிழக கவர்னராக 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ந்தேதி அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் நியமித்து உத்தரவிட்டார்.

தற்போது இன்றுடன் ரோசையாவின் பதவி காலம் முடிந்த பின்பும் புதிய கவர்னர் பற்றிய அறிவிப்பு எதுவும் விடப்படவில்லை.

புதிய கவர்னர் நியமிப்பதாக இருந்தால் பழைய கவர்னர் தனது மாளிகையை காலி செய்வதற்கு 15 நாள் அல்லது 10 நாட்கள் கால அவகாசம் தேவை. கவர்னர் மாளிகை வட்டாரத்தில் விசாரித்தபோது ரோசையா மாளிகையில் காலி செய்வதற்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை.

மேலும் பதவி காலம் முடிந்து செல்லும் கவர்னருக்கு மாநில அரசின் சார்பில் பிரிவுபசார விழா நடத்தப்படும். அந்த நிகழ்ச்சியும் இதுவரை நடைபெறவில்லை.

மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே சுமூகமான உறவு நீடிப்பதால் ரோசையாவுக்கு பதவி நீடிப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. புதிய கவர்னர் நியமிக்கப்படும் வரை அவருக்கு 2 ஆண்டுகள் அல்லது 3 ஆண்டுகள் வரை பதவி நீடிப்பு அளிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

இன்று இரவுக்குள் இது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

கவர்னர் ரோசையாவுக்கு தற்போது வயது 83 ஆகிறது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் வெமுரு என்ற ஊரில் 1933-ம் ஆண்டு ஜூலை 4-ந்தேதி பிறந்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் ஆந்திராவில் பல முதல்-மந்திரிகளின் மந்திரிசபையில் இருமுறை போக்குவரத்து மந்திரியாகவும், ஒருமுறை உள்துறை மந்திரியாகவும், 4 முறை நிதி மந்திரியாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

ஆந்திர சட்டசபையில் 16 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற சாதனை படைத்துள்ளார்.

ஆந்திராவில் முதல்-மந்திரியாக இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பின் ரோசையா முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார். அவரது ஆட்சியின்போது தெலுங்கானா போராட்டம் விஸ்வரூபம் எடுத்ததால் 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ந்தேதி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

ஆனால் அடுத்த 2 மாதத்தில் தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டார். ரோசையாவுக்கு சிவலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். தற்போது ரோசையாவின் வீடு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அமீர்பேட்டையில் உள்ளது.

மேலும் படிக்க
http://www.maalaimalar.com/News/District/2016/08/31120301/1035867/central-government-today-decide-TN-governor-post-continue.vpf

Friday, 9 September 2016

மீஞ்சூரில் 3 வீடுகளில் நகை-பணம் கொள்ளை

 
 
மீஞ்சூர் அத்திபட்டைச் சேர்ந்தவர் டேனியல். மின்வாரிய ஊழியர்.

இவர் நேற்று குடும்பத்துடன் வீட்டில் தூங்கினார். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 1 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் மற்றும் 2 செல்போன்களை கொள்ளையடித்து சென்றனர்.

டேனியலின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் உத்தமன். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றார். இவரது வீட்டு பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்று ரூ.15 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.

மீஞ்சூர் செந்தில் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினரை பார்க்க சென்றார். இதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த 3 கொள்ளை குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க
http://www.maalaimalar.com/News/State/2016/08/31121003/1035869/three-houses-jewel-money-robbery-in-minjur.vpf

Wednesday, 31 August 2016

டெல்லியில் மீண்டும் பெருமழை: போக்குவரத்து நெரிசலால் திணறும் சாலைகள்

 

 
தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணிநேரமாக கொட்டித் தீர்த்த பெருமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. முக்கிய சாலைகளை கடக்கும் வாகனங்கள் கிலோமீட்டர் நீளத்துக்கு வரிசையில் காத்திருக்க நேர்ந்துள்ளது.

டெல்லி தவுலா கான் ரிங் சாலை, பைரான் சாலை, மதுரா சாலை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் பரபரப்பான அலுவலக நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மோடி மில் மேம்பாலம், சாதிக் நகர், லாலா லஜ்பத் ராய் மார்க், சாகெட் மெட்ரோ ரெயில் நிலையம், நேரு பேலஸ், மாயாபுரி, ஜிம்கனா போன்ற பகுதிகளை கடந்து செல்லும் வாகனங்கள் ஒருமணி நேரத்துக்கும் அதிகமாக காத்திருக்க வேண்டியுள்ளது.

மழையின் காரணமாக டெல்லியில் இருந்து புறப்பட்டு செல்லும் விமான சேவைகளும், வந்திறங்கும் விமானங்களின் நேர அட்டவணையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அரசுமுறை பயணமாக டெல்லி வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை ஜான் கெர்ரி, இன்று காலை டெல்லியில் உள்ள ஜாமா மசூதி, கவுரி சங்கர் ஆலயம் மற்றும் சீஸ்கஞ்ச் குருத்வாரா ஆகியவற்றை பார்வையிட முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், தொடர்ந்து இடைவிடாது பெய்துவரும் கனமழையின் காரணமாக இந்த திட்டம் கைவிடப்பட்டதாக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை டெல்லி ஐ.ஐ.டி.யில் மாணவர்களிடையே கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜான் கெர்ரி, அங்கிருந்தவர்களை பார்த்து, ‘நீங்கள் எல்லாம் இந்த நிகழ்ச்சிக்கு படகில் வந்தீர்களா?’ என்று வேடிக்கையாக கேட்கும் அளவுக்கு மழை, வெள்ளத்தால் டெல்லி சாலைகள் சிக்கித் திணறி வருவது, குறிப்பிடத்தக்கது.

இன்னும் 24 மணிநேரத்துக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் டெல்லிவாசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க
 http://www.maalaimalar.com/News/TopNews/2016/08/31121839/1035872/Heavy-rains-lash-Delhi-again-throw-life-in-capital.vpf

Tuesday, 30 August 2016

தமிழக அமைச்சரவை மாற்றம்: பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் நியமனம்

 

தமிழக அமைச்சரவை இன்று (திங்கட்கிழமை) திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத் துறை அமைச்சர் பதவியிலிருந்து எஸ்.பி.சண்முகநாதன் விடுவிக்கப்பட்டுள்ளார். சண்முகநாதன் வகித்து வந்த பால்வளத்துறை இலாகா கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக மாஃபா கே பாண்டியராஜன் புதிதாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையும் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
http://www.maalaimalar.com/News/State/2016/08/29195644/1035586/Tamil-Nadu-Cabinet-reshuffle-Ma-Foi-Pandiarajan-gets.vp

சுனாமி தாக்கிய பகுதியில் 170 கி.மீ. வேகத்தில் மீண்டும் ஜப்பானை மிரட்டும் லயன்ராக் புயல் - 110 விமானச் சேவை ரத்து

 

 பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள சக்திவாய்ந்த ‘லயன்ராக்’ புயல் ஜப்பான் நாட்டின் வடகிழக்கில் உள்ள டோஹோக்கு மாகாணத்தில் மணிக்கு 120 முதல் 176 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று கரையை கடக்கும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த புயலின் எதிரொலியாக அடுத்த 24 மணிநேரத்தில் 35 சென்டிமீட்டர் அளவிலான பலத்த மழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் அந்த மாகாணம் முழுவதும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 110 உள்நாட்டு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஷின்கான்சென் நகரின் வழியாக செல்லும் புல்லட் ரெயில் சேவையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள புகுஷிமா அணு மின்சார நிலையத்தில் மின்சார உற்பத்தியும் பெருமளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இதன்விளைவாக, தலைநகர் டோக்கியோ அருகில் உள்ள கிழக்கு ஜப்பான் பகுதியில் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.

ஜப்பானின் பிரபல கார் உற்பத்தி நிறுவனமான டோயோட்டா, இந்த புயல் கடந்துவரும் வழியில் உள்ள தனது இரண்டு உற்பத்தி அலகுகளில் இன்றைய உற்பத்தியை நிறுத்திவைத்து தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு ஜப்பானில் சுனாமி தாக்கிய பகுதிகளை இந்த ‘லயன்ராக்’ புயல் இன்று மணிக்கு சுமார் 170 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு நடவடிக்கையாக பேரிடர் மீட்புப் படையினர் பல இடங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளனர்.
 
 மேலும் படிக்க
http://www.maalaimalar.com/News/World/2016/08/30120758/1035683/Typhoon-Lionrock-nears-Japan-s-tsunami-hit-northeast.vpf
 

அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி மறுப்பு: தந்தை தோளிலேயே உயிர் இழந்த சிறுவன்




  ஒரிசா மாநிலம் பவானிபட்னாவில் அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழந்த பெண்ணின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்து தராததால் அந்த பெண்ணின் உடலை கணவர் தோளில் சுமந்து 10 கிலோ மீட்டர் நடந்து சென்றார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இதே போன்ற சம்பவம் ஒன்று இப்போது நடந்துள்ளது.

கான்பூர் அருகே உள்ள பசல்கஞ்ச் என்ற இடத்தை சேர்ந்தவர் சுனில்குமார். இவரது மகன் அன்ஸ் (வயது 12). இவனுக்கு கடந்த ஒரு வாரமாக கடுமையான காய்ச்சல் இருந்தது.

உள்ளூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். ஆனால் குணமாகவில்லை. எனவே கான்பூரில் உள்ள லாலா லஜபதிராய் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி டாக்டர்கள் கூறினார்கள்.

எனவே சுனில் குமார் தனது மகனை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார். கடுமையான காய்ச்சலால் துடித்த அவனை தனது தோளில் சுமந்தபடி வந்திருந்தார்.

மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அவனை அனுமதிக்க மறுத்துவிட்டனர். பக்கத்தில் 250 மீட்டர் தூரத்தில் குழந்தைகளுக்கான ஆஸ்பத்திரி உள்ளது. அங்கு கொண்டு செல்லுங்கள் என்று டாக்டர்கள் கூறினார்கள்.

நிலைமை மோசமாக இருப்பதால் இங்கேயே அனுமதியுங்கள் என்று சுனில்குமார் டாக்டர்களிடம் மன்றாடினார். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

பக்கத்தில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்கு ஸ்டிரெச்சர் வசதி செய்து தரும்படி அவர் கேட்டார். அதற்கும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்யவில்லை.

இதனால் மகனை தோளில் சுமந்தபடி குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு சுனில்குமார் சென்றார். ஆனால் வழியிலேயே தந்தை தோளில் படுத்திருந்தபடியே சிறுவன் அன்ஸ் உயிரிழந்தான்.

குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது அவனை பரிசோதித்துவிட்டு அவன் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மகன் பிணத்தை தோளில் சுமந்தபடியே சுனில்குமார் வீட்டுக்கு கொண்டு சென்றார்.

இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 மேலும் படிக்க
http://www.maalaimalar.com/News/National/2016/08/30114033/1035673/Kanpur-Ailing-son-dies-on-father-shoulders-after-being.vpf